உள்நாடு

இறுதிநேரத்தில் ரணில் ஏவிய அதிரடி அஸ்திரத்தால் அடங்கிய குட்டியானைகள்!!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களின் சார்பில் சமிந்த விஜேசிறியால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், வாக்கெடுப்பு அவசியமில்லை என்று சபை முதல்வரும், பிரதமரும் அறிவித்தனர்.

இதையடுத்து இன்று (13) விவாதத்துக்குட்படுத்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அவற்றின்கீழான நிறுவனங்களுக்கான நிதிஒதுக்கடு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், வாய்மூலவிடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் 10.30 மணியளவில் குழுநிலை விவாதம் ஆரம்பமானது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமருக்கான ஒதுக்கீடுகள் உட்பட 22 ( நிறுவனங்கள், திணைக்களங்கள்) தலைப்புகளுக்கான குழுநிலை விவாதம் நடைபெற்றாலும், முற்பகல் முதல் மாலைவரை ஜனாதிபதி தொடர்பிலேயே ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.

குறிப்பாக ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களும், ஜே.வி.பியினரும் ஜனாதிபதியை கடுமையாக தாக்கி பேசினர். சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு சார்பாக கருத்துகளை முன்வைத்தனர்.மாலை 6. 35 மணியளவில் விவாதம் முடிவடைந்தது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் கடந்த சில நாட்களாகவே வியூகம் வகுத்துவந்தனர். சுமார் 30 எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பார்கள் என்று முஜிபூர் ரஹ்மான் எம்.பி. அறிவித்திருந்தார்.

இதன்படி விவாதம் முடிவடைந்தபின்னர், ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களின் சார்பில் சமிந்த விஜேசிறி – ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பை கோரினார். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிதி ஒதுக்கீடு நிறைவேறியது.

Comment here