கட்டுரைமலைநாடு

காமன் கூத்து என்றால் என்ன? நமது கலாச்சாரத்தின் அடையாளம்

இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளுக்கு குடிபெயர்க்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்கள் தங்களது உழைப்போடு தமது பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அறிவியல், தொழிநுட்பம், வழக்காறுகள், நம்பிக்கைகள், மொழி, பழக்கவழக்கங்கள், கலைகள், கூத்துக்கள், வழிபாடுகள், என எல்லாவற்றையும் சுமந்தே வந்துள்ளனர். பிரித்தானியர் ஆட்சியில் காணப்பட்ட அடக்கு முறைகளும் நிகழ்ந்தேறிய கொடுரங்களும் மலையக மக்களை மீள முடியாத துன்பம் நிறைந்த அடிமை வாழ்க்கைக்குத் தள்ளியது. அதன் பெருந் தாக்கத்தை இன்றுவரையிலும் நாம் காணலாம். இன்றும் பலரது கண்களுக்கு நாம் விருந்தாளிகளே! இப்படியான நெருக்கடி மிக்க சூழலிலும் மலையக மக்கள் தமது பாரம்பரிய கலைகளை தமக்கு ஆறுதல் அளிக்கும் அடையாளங்களாக அன்று தொட்டு இன்று வரையிலும் போற்றி பாதுகாத்து வருகின்றனர் என்பது கவனிப்பிற்குரியது.

அந்த வரிசையில் மலையக மக்களின் தனித்துவமான பாரம்பரிய வடிவங்களான கூத்துக்கள், நாட்டார் பாடல்கள், கதை வடிவங்கள், விளையாட்டுக்கள், ஆட்டங்கள், நகைச்சுவை சார்ந்த ஆட்டங்கள், நாடகம் என்பவற்றோடு சடங்குகள், கடவுள் வழிபாட்டு முறைகள் என நீண்டு செல்லும் பாரம்பரிய கலைத்துவங்களை, பண்பாட்டு முறைமைகளை கொண்டாடி வருகின்றனர். இவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை.

மலையக மக்களின் தனித்துவமான கலைவடிவங்களுள் கூத்துக்களுக்கு தனியான செவ்வாக்குண்டு. மலையகத்து கூத்துக்கள் எனும் போது காமன் கூத்து, அர்சுணன் தபசு, பொன்னர் சங்கர், முனியாண்டி கூத்து, மதுரை வீரன் கூத்து, இராமன் கூத்து (இவற்றில் பின் வந்த மூன்றும் வழக்கொழிந்து விட்டன) என பல்வகைக் கூத்துக்கள் சடங்கோடு இணைந்த விழாக்களாக கொண்டாடப்பட்டு வந்தன, வருகின்றன. ஆரம்பகாலத்தில் மலையகத்தில் பல்வேறு ஊர்களில் கொண்டாடப்பட்ட போதும் இன்று பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு வரும் துர்பாக்கிய நிலையில் இக்கலை வடிவங்கள் உயிர்துடிப்பதைக் காணலாம். அதாவது மலையகத்து கலைகள் அழிந்து விடவில்லை. அது கவனிபாரற்று ஓய்ந்து கிடக்கின்றது. பாரம்பரிய கலைகளில் கூத்துக்கள் மக்கள் வாழ்ந்து மகிழ்ந்து கொண்டாடுதலுக்கான வெளியைக் கொடுக்கின்றன. இவை இன்றைய காலத்தின் தேவைப்பாடாகவும் எமது அடையாளங்களாகவும் உள்ளன. எனவே இவற்றை வலுபெற செய்வதும் கொண்டாடுதலும் எமக்குரிய கடமையாகும்.

இதன் பின்னணியில் அறிமுக உரையாக வரும் இக்கட்டுரை மலையகத்து கூத்து வடிவங்களில் இன்றைக்கும் பல ஊர்களில் மக்கள் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் விழாவான காமன் கூத்து, அதில் பொதிந்துள்ள மக்கள் நம்பிக்கை பற்றி பேசவிருக்கிறது. “காமனை சிவன் எரித்த வரலாறு காமன் கூத்து” என ஒற்றை வார்த்தையில் கூறி விடலாம். ஆனால் காமன் கூத்தின் தனித்துவமான ஒவ்வொரு விடயங்களும் ஆழப்பொருள்படுபவை. இவை தனியான ஆய்விற்குரியதும் கூட. காமன் கூத்து தொடர்பான பல்வேறு ஆய்வுகள் இடம்பெற்றுள்ளமை கவனிப்பிற்குரியது. மாத்தளை வடிவேலன், சோதிமலர் ரவீந்திரன், சந்தனம் சச்சிதானந்தன், லெனின் மதிவாணன், பேரா.க.சிவத்தம்பி, சு.முரளிதரன், பொன் பிரபாகரன் என இப்பட்டியல் நீண்டு செல்கின்றது. காரணம் மலையகத்துக்கான தேசிய அடையாள அரங்காக காமன் கூத்து முக்கியத்துவப்படுகின்றது. எனவே இக்கூத்தினை பற்றிய புரிதலும் தேடலும் அதனை பாதுகாத்தலும் முக்கியமாகும்.

ரதிக்கும் மன்மதனுக்கும் காப்பு கட்டுவதுடன் ஆரம்பமாகும் காமன் கூத்தின் கதை கரு ஒன்றாயினும் அதன் அமைப்பில், உள்ளடக்கங்களில் ஊருக்கு ஊர் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது. எனினும் பின்வரும் பொதுவான நிகழ்வுகளை நாம் எல்லா ஊர்களிலும் காணலாம்

▪️காப்புக் கட்டுதல்
▪️காமன் கம்பம் நடுதல்
▪️விரதமிருத்தல்
▪️ரதி மன்மதன் திருமணம்
▪️பிரம்ம தேவனின் தூதன் ஓலைக் கொண்டு வரல்
▪️அகோர வீரபத்திரன் வருகை
▪️ஈஸ்வரனுக்கான தனியாக அமைக்கப்பட்ட பரணில் ஈஸ்வரன் இருத்தல்
▪️மோகினி வரவு
▪️விநாயகர் பூஜை
▪️தேர்வசந்தன் அழைப்பு
▪️யமன், காலன், தூதன் வருகை
▪️வெட்டியான் வெட்டிவிச்சு ஆட்டம்
▪️குறத்தி குறி சொல்ல்
▪️காமன் சிவன் மீது மலர்க்கணைத் தொடுத்தலும் சிவன் நெற்றிக் கண் கொண்டு காமனை எரித்தலும்
▪️காமன் கதை பொய்யா மெய்யா என்ற வாதப் போட்டி
▪️ரதிதேவியின் ஒப்பாரி
▪️சிவன் காமனை உயிர்ப்பித்தல்
▪️சிவனிடம் ஆசி பெறல்

இவ்வாறான ஒழுங்கமைப்பில் காமன் கூத்து அளிக்கை செய்யப்படுகின்றது. குறிப்பாக மாசி மாதம் அமாவாசைக் கழிந்து வரும் மூன்றாம் நாளில் தொடர்ந்து பதினாறு நாட்கள் பெருவிழாவாகக் ஊர்மக்களால் கொண்டாடப்படுகின்றது. சில நாட்கள் மன்மதனும் ரதியும் ஊர் முழுதும் சுற்றித் திரிந்து பாடி ஆடுவர். பக்கத்து ஊர்களுக்கும் சென்று காணிக்கை வாங்கி வருவர். ஊர்மக்களும் அவர்களை உண்மையான ரதி மன்மதனாக பாவித்து மெய்யன்போடு தங்களால் இயன்ற காணிக்கைகளை கொடுப்பர். இது கூத்துக்கான முன்னீடாக பயன்படும். குறித்த நாளன்று காமன் கோயிலின் முன்றலில் அதாவது பொட்டலில் நான்கு வகையான களங்கள் அமைக்கப்படும்.

பொது வெளி – இது காமன் கூத்தில் வரும்; வே~ங்கள் (பாத்திரங்கள்) ஆடிவரும்.

பரண் – இது உயரமாக படிகள் அமைக்கப்பட்டு சிறு குடிசை அமைப்பில் காணப்படும். இங்கு தான் சிவன் தவம் பரிந்து கொண்டிருப்பார்.

இந்திரசபை – இது படச்சட்ட மேடையமைப்பில் காணப்படும். இது தேவலோகமாகக் கருதப்படும். இதில் தேவலோகப் பாத்திரங்கள் அமர்ந்திருப்பர்.

திருமண மண்டபம் – ரதிக்கும் மன்மதனுக்கும் இங்கு முறைப்படி திருமணம் இடம்பெறும்.

இவற்றோடு காப்பு கட்டுமிடம், வில்படைக்குமிடம், ஒப்பனை செய்யுமிடம் என்பன தனித்துவ இடங்களாகக் காணப்படுகின்றன.

இவ்வாறிருக்க இக்கூத்தில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைகள் அதாவது ஐதீகங்கள் மிகமுக்கியமானவை. “நம்பிக்கையின் சாரமே காமன் கூத்தின் இன்றைய இருப்பு” என்றால் அது மிகப்பொருத்தமாக இருக்கும் என்பது எனது கணிப்பு. அதற்கு இக்கூத்தின் கதையினை சுருக்கமாகவேணும் அறிந்து கொள்வது பிரயோசனமானது என நினைக்கின்றேன். காமன் கூத்து புராண கதையின் கருவாகும்.

“சிவன் ஒருமுறை பூலோகத்தில் உலாவச் சென்ற போது அவரிலிருந்து விழுந்த வியர்வைச் சொட்டுக்களை பூமாதேவி ஏந்திக் கொள்ள உண்டான சக்தி தான் மன்மதன் (காமன்). அவரை பூமியில் பிறந்த விஸ்ணுவின் அவதார புரு~ரான மாயவன் எடுத்து வளர்க்கின்றார். அவன் அழகில் சிறந்தவனாக, புஜபலமிக்க வீரனாக வளர்ந்து பல சாகசங்கள் புரிந்து வருகின்றான். இது ஒருபுறமிருக்க சிவனும் உமையும் பூலோகம் வந்து இன்புற்றிருக்க பிறந்த குழந்தையே ரதிதேவி. ரதியும் மதனும் ஒருவரில் ஒருவர் காதல் கொண்டு தேவர்கள் புடை சூழ திருமணம் புரிந்து கொள்கிறார்கள். தாம் சகோதரர்கள் என்பது அவர்கள் அறியா பிழையாக கூறப்படுகின்றது. அதன் சாபம் தான் பின்னர் தொடர்ந்ததாகவும் கூறப்படுகின்றது. அதாவது முரண்பாட்டிற்கான மூலம் இங்கிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது.

“சாரையும் சர்ப்பம் போல் சருவி இருவருமே
சந்தோசமாயிருக்க நேரமே நேரமே நேரமே – இந்த
நேரம் தடையுராது நேரிழையா ளெந்தனை
நீரும் சுகித்து சுகம் தாருமே தாருமே தாருமே”
(ரதிதேவி சொல்வது- லாவணி)

இப்படி ரதியும் மதனும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து சந்தோசமாக ஆடிப்பாடி திரிகின்றனர். இதேவேளை சிவன் புரிந்த அரிய தவத்தால் பூலோகம் துன்பத்தில் மூழ்க அத்தவத்தின் உச்சம் இந்திர சபையையும் அணலாகத் தாக்கியதால் இந்திரன் சிவனின் தவத்தை கலைக்க எண்ணி மன்மதனுக்கு தூதனுப்புகின்றான். அவன் மன்மதனிடம் தந்திரமாக சத்தியம் வாங்கிக் கொண்டு சிவனின் தவத்தை கலைக்க மன்மதனை தூண்டுகின்றான். ரதி எவ்வளவோ தடுத்தும் அவளால் முடியவில்லை. தான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற இவளது சொல்லை கேளாது சிவனின் தவமதனை மலர்கணைக் கொண்டு கலைக்க் கோபம் கொள்ளும் சிவன் நெற்றிக்கண் பொறியால் மன்மதனை எரித்து விடுகிறார். தோழி மூலம் சேதி அறிந்த ரதி சிவனிடம் இறைஞ்சி மூன்றாவது நாள் கணவனை மீட்டு எடுக்கின்றாள். ஆனாலும் அவன் அவளது கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று சாபவிமோசனம் பெறுவதாக கதை முடிவடைகின்றது”.

இந்த கதையானது வாய்மொழிக்கூடாக நேரடியாக ஊர்களில் கேட்டு அறிந்து கொண்டது. இவை பற்றி பல கிளை கதைகளும் எமக்கு கிடைக்க கூடியதாய் உள்ளது. அது தனியாக நோக்கப்பட வேண்டியது.

இக்கூத்தின் ஐதீகம் அதாவது நம்பிக்கை மிகவும் ஆழமான ஒன்றாக வெளிப்படுகின்றது. ஆரம்ப காப்பு கட்டலிலிருந்து கடைசி மன்மதன் உயிர்ப்பித்தல் வரை நம்பிக்கை என்ற அச்சாணி ஆழப்பொதிந்திருப்பதைக் காணலாம்.

▪️மன்மதன் வேடம் ஏற்பவர் 16 நாட்கள் தனது சொந்த வீட்டில் தங்குவதனை தவிர்த்தல். அவர் திருமணமானவர் என்ற பட்சத்தில் தன் மனைவியிடமிருந்து 16 நாட்கள் முற்றாக விலகியிருத்தல்.

▪️காமன் திருவிழா முடியும் வரை ஊர் முழுதும் கட்டுபாடுடன் இருத்தல். (உணவு, வெளியூர் பயணங்கள்)

▪️காமன் கூத்தில் வரும் வே~ங்களை (பாத்தரங்களை) அவர்களாகவே கருதுதல். குறிப்பாக அருள் வந்து ஆடும் போது அச்சத்துடன் மிகுந்த பக்கதியுடன் அவர்களை வணங்குதல்.

▪️காமனை எரித்த சாம்பலினை அள்ளி அதனை சக்தி வாய்ந்த பிரசாதமாக வீடுகளுக்கு, பயிர் நிலங்களுக்கு நீரோடு கலந்து தெளித்தல்.

▪️காமனை எரித்த கம்பத்தினை பயிர் நிலங்களில் கொண்டு நடுதல்.

▪️சில அகோரமான பாத்திரங்கள் வரும் போது பருவம் அடைந்த பெண்கள், கர்பினித்தாய்மார்கள் பார்க்க கூடாது என்ற விடயம்.
▪️கூத்தில் வரும் சில சம்பவங்கள்.

▪️இந்திர சபை அல்லது தேவர் சபை என அழைக்கப்படும் மேடையில் படிக்கட்டு அமைக்கப்பட்டு முதல் வரிசையில் தெய்வங்களும் இரண்டாம் வரிசையில் தேவர்களும் மூன்றாம் வரிசையில் பட்சிகளும், மிருகங்களும்(தெய்வ வாகனங்கள்) அமர்ந்திருப்பர்.

அது உண்மையான தேவர் சபையாக கருதப்படுகின்றது. இங்கு சிறுவர்கள் வேடமிட்டு விடிய விடிய அமர்ந்திருப்பர்.
▪️ரதி மன்மதனின் திருமணம் உண்மையாகவே நிகழ்த்தப்படுகின்றது. திருமணமேடையில் மஞ்சள் துண்டினைக் கொண்ட தாலி கட்டப்படுகின்றது. சூழவுள்ளவர்கள் வாழ்த்தி மகிழ்வர்.

▪️மன்மதன் இறந்த பிறகு தாலியினை அறுத்து வெள்ளை சேலையுடுத்தி வீடுவீடாக மடிப்பிச்சை எடுப்பதற்காக ரதியை அழைத்து வருவர். அதற்கு ஒப்பாரி பாடல் பாடப்படும். பெருந்துயரை கொடுப்பதாய் இச்சம்பவம் இருக்கின்றது. பெண் பிள்ளைகளை தாலியிழந்த ரதியை பார்க்க ஊரவர் அனுமதிப்பதில்லை. (இது ரதி என்ற பெண்ணுக்கூடாக பெண் சமூகம் ஓரங்கட்டப் படுகின்றமையை வெளிப்படுத்துகின்றது. இது விமர்சன பார்வைக்குரியது.)

▪️காமனை எரித்தப் பின் ரதியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து மூன்றாம் நாள் காமன் கோணிலுக்கு முன்னால் உயிர்ப்பித்தல் நடைபெறும்.

▪️பச்சை வில் கொடுத்து அல்லது கரும்பு வில் கொடுத்து ஆடவைத்தலும் இருவரையும் சேரவிடாது சீலையால் இடுப்பில் கட்டி கட்டுப்படுத்தலும். இது கவனமாக செய்யப்படும். காரணம் அருளின் உச்சத்தால் இருவரும் நெருங்கவே ஒருவரை ஒருவர் கடித்து கொள்வார்களாம். இது மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகின்றது.

இவற்றோடு காமத்தகனமும் உயிர்பித்தலும் காமன் கூத்தின் பிரதான அம்சமாக உள்ளன. காமன் தகனத்தின் போது காமன் கம்பத்தை சுற்றி விறகு (மிளாருகட்டு) குவிக்கப்பட்டு அதிகாலைப்பொழுதில் எறிக்கப்படும். இது சிவன் காமன் எறித்ததை பிரதிபலிக்கும். காமனின் உயிருக்கு பதிலாக கோழிக்குஞ்சு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். உயிர் பலிகொடுக்கா விட்டால் மன்மதன் வே~மிட்டவரின் உயிருக்கு ஆபத்து என்று ஊரவர்கள் கூறுகின்றனர்.

உயிர்பித்தலின் போது காமன் பொட்டலில் மன்மதனின் உருவப்படம் வரையப்பட்டு மந்திர உச்சாடனங்கள் கூறி உயிர் எழுப்பும் செயற்பாடு ஆரம்பிக்கப்படும். ஏற்கனவே மன்மதனை எறித்து பெறப்பட்ட சாம்பலினாலே இவ்வுருவப்படம் வரையப்படுகின்றது. இவ்வுருத்தின் தலைப்பகுதியில் வாழையிலையில் வேட்டியால் போர்த்தப்பட்ட மன்மதனும் (வே~மிட்டவர்) கால்பகுதியில் மடிபிச்சை ஏந்தியவளாய் ரதிதேவியும் அமர்ந்திருப்பர். அத்தோடு அவ்வுருவப் படத்தின் மீது காமனுக்கு அணிவித்திருந்த ஆடை அணிகலன்கள் யாவும் வைக்கப்பட்டு வெள்ளை வேட்டியால் மூடப்பட்டிருக்கும். பின்னர் சிவன் வே~ம் பூண்டவர் அதற்கு முன்னால் வந்து மன்மதனை மஞ்சள் தெளித்து மூன்று தடவை பிரம்பால் தட்டி “மன்மதா எழும்பு” என்று கூற மன்மதன் அருளோடு எழுப்பப்படுவார். அதுவரையிலும் மன்மதனாக வே~ம் அணிந்தவர் இறந்தவராகவே கருதப்படுகின்றார். இந்த காமன் தகனத்திலும் உயிர்ப்பித்தலிலும் மமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஆழமாக வெளிப்படுவதைக் காணலாம்.

கடவுள் நம்பிக்கையோடு கொண்டாடப்பட்டு வரும் இக்காமன் கூத்தில் 30ற்கும் மேற்பட்ட வே~ங்கள் வருவது குறிப்பிடத்தக்கது. காப்பு கட்டும் நாள் அன்று எல்லோரும் பக்தியோடு விரதமிருந்து தனக்கான வே~ங்களை பெற்றுக்கொள்வர். குறிப்பாக மன்மதன், ரதி, சிவன், வீரபத்திரன், ஓலைத்தூதன், காளி, தூதன், யமன், காலன், எறிதூதன் போன்றோர் வழிவழியாக ஆடிவருபவர்களாக உள்ளனர். இதனை பரம்பரை தொடர்ச்சி என்றும் கூறலாம். சிலவேளைகளில் விருப்பமின்றி விட்டுத்தருகின்ற நிலைபாடும் உள்ளது. போட்டிப் போட்டுக் கொண்டு தங்களுக்கான வே~ங்களை பெற்று கொள்வது நம்பிக்கையின் சாரமாகவே உள்ளது. அத்தோடு அவர்கள் அருள்வந்து (உருவேறி) ஆடுவது முக்கியமான விடயமாகும்.

“சிவன் தவசைத் தானழிக்க மௌனமதை ஒழிக்க…” என்ற பாடல்களெல்லாம் பாடும் போது ரதி, மன்மதன் பச்சை வில்லெடுத்து உச்சத்தில் உருவேறி ஆடுவர். இது போன்ற பாடல்கள் அருளை வரவழைக்க அறம் வைத்து பாடப்படுவதாக கூறப்படுகின்றது. இதில் “செஞ்சணக்கு செஞ்சணக்கு…” என்ற தப்போசை பெரும் பங்கு வகிக்கின்றது. இங்கு தப்பு பிரதானமாக பயன்படுத்தப் படுகின்றது. இப்பொழுது டோல்கீயும் பெருவாரியாக பயன்படுத்தி வருகின்றனர்.

காமன் கூத்தில் ஒப்பாரி, லாவணி எனப்படும் இருவகைப் பாடல்கள் பாடப்படுகின்றன. பாடலோடு இணைந்த தப்பிசை அதற்கு வலுசேர்க்கும். இப்பாடல்களினூடாகவே காமன் கூத்தின் கதை கூறல் பண்பு வெளிப்படுகின்றது.

“பச்சை கலாப மயிலே
அச்சுதன் மருமகளே…” என்று பாட தப்பு அடிக்கப்படும். இது ஒப்பாரிப் பாடல்.

“போக விடை கொடடி
கண்ணே பொன்னே போக விடை கொடடி”

காதலரே நீரும் கரும்பு வில்லெடுத்து
காலகாலனின் மீது கனிவுடன் விடுத்து
சாதகமாய் எரிந்தால் நான் யாரையடுத்து
தங்கி பிழைப்பேன் நாதா உரைத்திடீரெடுத்து…”

இது லாவணிப்பாடல். தப்பு அடிக்கப்பட்டு பாடல் பொருள்படும். இப்பாடல்களின் போது வெளிப்படும் ஆட்டக்கோலங்கள் அழகு வாய்ந்தவையாகும். பாடல்களுக்கும் தாளத்திற்கும் ஒத்திசைவாக மென்மையாகவும் வேகமாகவும் மாறி மாறி ஆடப்படும். ஒப்பாரி முடிய “செஞ்சணக்கு செஞ்சணக்கு” என தப்பு முழங்க ரதியும் மன்மதனும் பச்சை வில் ஏந்தி அரைவட்ட வடிவில் திரும்பாது ஆடுவர். லாவணிப் பாடல்கள் உச்ச ஸ்தாயில் ஒலிக்கும் போது ஓரிரு வேளைகளில் மட்டுமே ஆடுவதுண்டு. ஆட்டம் முழுதும் இவர்கள் அருளுடனே இருப்பர். அதனால் தொடர்ச்சியான ஆட்டக் கோலங்களை காண்பது அரிது.

காமன் கூத்தில் வரும் வே~ங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. இவற்றின் அகப்புறத் தோற்றங்களில் உடை ஒப்பனை பெரும் பங்கு வகிக்கின்றது. ஒப்பனை செய்தல் “வே~ம் கட்டுதல்” என பொருள்படுகின்றது. மன்மதனுக்கு பச்சை நிறத்தில் நீண்ட கை சேட்டும் கீழ்ப்பகுதியில் பாவாடை போன்ற அங்கியும் ஒன்றாக இணைத்து அணிவிக்கப்படும். முகத்திற்கும் பச்சை நிற அரிதாரம் பூசப்பட்டு தலைக்கு கூரான கிரீடம், புஜகிரீடம், மார்பில் பதக்கம், இடுப்பில் அழகியப்பட்டி, மாலைகள் என்பவற்றை அணிவித்து மன்மதனை அழகுபடுத்துவர். ரதி பாவாடை, ரவிக்கை, தாவணியும் தலைக்கு உருண்டை வடிவிலான கிரீடம் மற்றும் நகைகளும் அணிந்திருப்பாள். மஞ்சள் நிறத்தால் இவளுக்கு அரிதாரம் பூசப்பட்டிருக்கும். கைகளில் சீலைத்துண்டு அல்லது கைக்குட்டையை வைத்து வீசி வீசி ஆடுவது இன்னும் அழகு சேர்ப்பதாய் அமையும்.

இவர்களோடு வீரபத்திரன், ஓலைத்தூதன், காளி, தூதன், யமன், காலன், எறிதூதன் போன்றோர் கடுமையான ஒப்பனைகளோடு கையில் தீப்பந்தங்களை ஏந்தி அருளோடு ஆடி வருவர். இவர்கள் பயங்கர தோற்றத்துடன் இங்கு பிரவேசிப்பர்.

இவ்வகையில் ஒப்பனை செய்யப்படுவதும் மக்கள் அவர்களை தெய்வமாக பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதைக் காணலாம். “சிவப்பு நிறத்தில் நீண்ட நாக்கு வெளியில் தொங்க காளி பயங்கரமாக வரும். இதன் முன்னெதிரில் நின்றால் கர்ப்பமும் கலையும் அபாயம் உள்ளது” எனக் கூறி கர்ப்பினி தாய்மார்களை பார்ப்பதற்கு அனுமதியளிப்பதில்லை. இந்தளவிற்கு பிரமாண்டமான ஒப்பனை செய்யப்பட்டிருக்கும்.

மேலும் பக்திக்காகவும் சில நேரத்;திக் கடன்களை நிவர்த்தி செய்வதற்காகவும் பிள்ளைப்பேறு வேண்டியும் (குறிப்பாக ஆண்பிள்ளை வேண்டி) இல்வாழ்க்கையமையவும் ஊர்ச் செழுமைக்காகவும் நோய்நொடிகள் வராது தவிர்க்கவும் காமன் கூத்து ஆடப்பட்டு வருகின்றது. மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு விடயத்திலும் அடிப்படை அம்சமாக நம்பிக்கை மட்டுமே சாரமாய் வருவது தெளிவு.

இவர்கள் நிலை நின்று நோக்கும் போது காமன் கூத்து வெறுமனே பொழுதுபோக்காக மட்டுமன்றி நம்பிக்கைகள் நிறைந்த சடங்காகவே இன்று வரையிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இந்த அம்சமே காமன் கூத்தின் இன்றைய இருப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதோடு பிற கலைகளின், சாதனங்களின் தாக்கம் என்பது உட்புகாது தனித்துவ மக்கள் கலையாக இருந்து வருகின்றது. எனவே காமன் கூத்தும் மக்கள் நம்பிக்கையும் ஒன்றை விடுத்து ஒன்றை பிரித்து பார்க்க முடியாத நிலைப்பாடு இங்கு தெளிவு பெறுகிறது. இது மலையக மக்களின் சொத்தாகும்.

இன்றைய காலத்தில் மக்களின் வாழ்வியல் ரீதியான பல்வேறு அடிநிலைச் சிக்கல்களால் சில ஊர்களில் தொடர்ந்து ஆடப்பட்டு வந்த காமன் கூத்து இன்று கைவிடப்பட்டு வருகின்றமை மிகுந்த வேதனையை அளிக்கின்றது. எமது முன்னோர்கள் அந்நியரால் அல்லலுற்றப் போதும் அடிமிதி வாங்கியப் போதும் தமக்கான ஆறுதல் ஆற்றுகையாக, எதிரகால சந்ததியினரின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையாக, தமது அடையாளங்கள் அடுத்தடுத்த சந்ததியினருக்கு கடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளுக்காக காலம் காலமாக கொண்டாடி வந்த இப்பெரு விழாவை கவனிப்பாரற்று ஆக்கலாமா? நமது அடையாளத்தை நாமே மழுங்கடித்து விட்டு எங்களுக்கான தனித்துவம் இல்லை!, எங்களுக்கான அடையாளம் மறைக்கப்படுகிறது!, எங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது! என்று புலம்பித் திரவதில் அர்த்தம் ஏதும் இல்லையே!

ஒரு சமூத்தின் அடையாளம் சர்வதேசத் தரத்தில் அவர்களின் முகவரிகளாகின்றது. எனவே நவீனம் என சொல்லிக் கொண்டு பழையதை மறந்து புதியதன் பின்னால் ஓடித்திரிந்து எம்மை நாமே மறப்பதை விட எமக்கானதை நேசிப்போம். எம்மை பற்றியே யோசிப்போம். எமது பாரம்பரியம் எமது அடையாளங்களாகும். காமன் கூத்து மட்டுமல்ல மலையகத்து தனித்துவங்களை பேனுவதும் கொண்டாடுவதும் எமது ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கூட என்பதை இச்சிறு தொகுப்புரை எடுத்துரைத்துச் செல்கிறது.

குழந்தைவேல் ஞானவள்ளி
விடுகை வருடம்
நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்

Comment here