Top Storyமலைநாடுவிளையாட்டு

யார் இந்த மலையகத்தின் சாதனை மைந்தன் சண்முகேஸ்வரன்?

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களது மகனாக பிறந்து தரம் 1 புதுகாட்டு தோட்டப் பாடசாலையிலும் 6-9 வரை ஆக்ரோயா பாடசாலையிலும் 10-11 வரை குயில்வத்தை த.ம.வி. பாடசாலையிலும் கல்விப் பயின்று வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாது 8000ம் ரூபாவுக்கு கொழும்புக்குச் சென்று வாகனம் கழுவும் நிலையத்தில் வேலை செய்து தனது குடும்பத்தை பார்ப்பவர் தான் இந்த சண்முகேஸ்வரன்.

வேலை செய்த உரிமையாளரது உதவியுடனும் சமூக சிந்தனையாளர் சுப்ரமணியத்தின் ஆலோசனையோடும் இலங்கை இராணுவத்தில் சேர்ந்து தனது ஆர்வத்தினால் ஒவ்வொரு போட்டியிலும் முதலாம் இடத்தினைப் பெற்று தற்போது கிட்டத்தட்ட 35000 ரூபா அரச ஊதியத்தோடு இராணுவத்தில் பயிற்சி பெற்று வருகின்றார்.

இன்று அவருக்கு பயன்படுத்துவதற்கு ஒழுங்கான பாதணி இல்லை. சாப்பிடுவதற்கு புரோட்டின் அடங்கிய திருத்தமான உணவில்லை. ஆயினும் மனதில் மட்டும் உறுதி உண்டு. ஆகவே, வெற்றி அவரைப் பற்றியுள்ளது.

அவரது பாதணியின் விலை 22000ரூபா. இன்றும் அவரது குடும்ப வறுமை காரணமாக ஒழுங்கான பாதணி இன்றியே ஓடுகின்றார்.நோயாளர்களாகிய பெற்றோரையும்,தோட்டத் தொழிலாளியான அண்ணாவையும,வீட்டு வேலை செய்யும் அக்காவையும் சிறப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு ஓடிக்கொண்டிருக்கும் இவர் மலையகத்தவரது மகன். இவரை உலகளவில் அடையாளப்படுத்த நாம் முன்வர வேண்டும்.

இவரது வெற்றி மலையகத்தின் கௌரவம். அத்துடன் தற்போதைய இவரது தேவை ஒழுங்கான பாதணிகளும் புரோட்டின் அடங்கிய அங்கிகரிக்கப்பட்ட உணவுமே ஆகும். அதனை நாம் வழங்க ஏற்பாடு செய்வோம்.

Comment here