ஆசிரியர் தலையங்கம்மலைநாடு

தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதியின் தலையீடு அவசியம் ; திலகர் எம்.பி. சபையில் பகிரங்க வேண்டுகோள்

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஏற்படக்கூடிய போராட்டங்களைத் தவிர்ப்பதற்காகவும், அரச ஊழியர்களின் வேதனத்தை இயலுமானவரை உயர்த்துவதற்கும் ஜனாதிபதி, விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆணைக்குழு ஒன்றை தாபித்துள்ளார்.

அதேநேரம், அடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி தாமே உண்ணாவிதரம் இருந்து உயிரை மாயத்தேனும் தமது சம்பளவுயர்வுக்காக போராடும் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி பாராமுகமுகமாக செயற்படுகின்றார். சம்பள பிரச்சினை உள்ளிட்ட மலையக மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்ய நான் ஆணைக்குழு ஒன்றை கோரி மூன்று வருடங்களாகியும் ஜனாதிபதி இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அமரதேவ அழகியல் ஆராய்ச்சி மத்திய நிலையம், மதுவரி, உற்பத்திவரி ஒழுங்குவிதிகள் மீதான, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுமபோதே மேற்படி கேள்வியினை எழுப்பினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மதுவரி திருத்தச்சட்டம் தொடர்பில் இந்த சபையில் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் அதேநேரம் கூடவே உற்பத்திவரி சம்பந்தமான ஒழுங்குவிதிகள் மூன்று தொடர்பாக யாரும் கருத்து கூறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கின்றது. அத்தகைய ஒழுங்கு விதிகளின் கீழ் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதி பத்திரம் வழங்கல், முன்னாள் இராணுவத்தளபதிக்கு தீர்வையற்ற வானகப்பத்திர அனுமதி வழங்குதல் மற்றும் இராஜதந்திரிகளின் இராஜதந்திர காரியலாங்களில் தீர்வையற்ற வகையில் இறக்குமதி செய்யப்பட்டு பாவிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்தல் போன்ற விடயங்களும் விவாதிக்கப்படுகின்றன.

இதனை நான் குறிப்பிடுவதற்கு காரணம், இவ்வாறு மாகாண சபை உறுப்பினர்களின் வாகன வசதிகளோ, சுயாதீன ஆணைக்குழு உறுப்பிர்களின் சம்பள விவகாரமோ, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரமே பேசப்படுகின்ற இதே பாராளுமன்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றது என்பதனை நினைவூட்டவே.

இன்றும் கூட டெய்லி நிவ்ஸ் ஆங்கில பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கக் கூடிய செய்தியை சபையில் வாசித்து காட்ட விரும்புகிறேன். அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஏற்படக்கூடிய போராட்டங்களைத் தவிர்ப்பதற்காகவும் அரச ஊழியர்களின் வேதனத்தை இயலுமானவரை உயர்த்துவதற்கும் என விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆணைக்குழு ஒன்றை தாபித்துள்ளதாக அந்த செய்தி கூறுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பைக் கோரி நடாத்தப்படும் போராட்டங்கள் சாதாரண பொதுமக்களின் நாளாந்த வாழ்வைப் பாதிப்பதாகவும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகவும் உள்ள நிலையில் அவற்றைக் குறைப்பதோடு அவர்களுக்கு உயர்ந்தபட்ச வேதனத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் குறித்த ஆணைக்குழு அமைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது.

என்னுடைய வாதம் என்னவெனில், அடுத்தவர்க்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் தமது உயிரை மாய்த்தேனும் வேதன உயர்வுக்காக உண்ணாவிதம் இருந்து போராடும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிடாமல் இருப்பது ஏன் என்பதாகும். இந்தக் கேள்வியை எழுப்புவதற்கு எனக்கு போதுமான நியாயம் இருக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயம் உள்ளிட்ட மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளைபற்றிய பதிவினை செய்வதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு இந்த சபையிலும் இந்த சபைக்கு வெளியே சர்வகட்சி மாநாட்டிலும் நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தேன். காரணம் சுதந்திரத்துக்குப் பின்னர் குடியுரிமை பறிக்கப்பட்ட இந்த மக்கள் பொதுநிர்வாகக் கட்டமைப்பில் இருந்து விலக்கிவை க்க்பபட்டமையினால் அவர்களுக்கென பிரத்தியேகமான பிரச்சினைகள் உண்டு.

எனது கோரிக்கையை எழுத்து மூலமாகவும் ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன். அதனை கவனத்தில் எடுப்பதாக பதில் கடிதம் அனுப்பிய ஜனாதிபதி இன்று மூன்று வருடங்களாகியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவிரவும் தலவாக்கலை , அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத் தொழிலாளர்கள் இருவர் உண்ணாவிரதம் இருந்து விடுத்த கோரிக்கையும் கூட ஒரு தொகை சம்பளத்தை கோரியல்ல.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவிடயம் தொடர்பாக மேற்கொள்ளும் கூட்டு ஒப்பந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்பதாகவே இருந்தது. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அதனையும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்தேன். இதுவரை அதற்கும் எந்த பதிலும் இல்லை.

பெருந்தோட்டக் கைத்தொழிலில் தனியே தனியார் பிராந்திய கம்பனிகள் மாத்திரமல்ல அரசுக்கு உடமையான ஜே.இ.டி.பி, எஸ்.பி.சி தோட்டங்களும் உள்ளன. அங்கு தனியார் கம்பனிகள் கைச்சாத்திடும் கூட்டு ஒப்பந்த முறையில் தீர்மானிக்கப்படும் வேதனமே அரச தோட்டங்களிலும் நடைமுறைப்படுத்த ப்படுகின்றது.

தனியார் தீர்மானிக்கும் ஒப்பந்தத்தையும் சம்பளத்தையும் அரச நிறுவனங்கள் பின்தொடர்வது வெட்கக் கேடானது. வடக்கிற்கு, கிழக்கிற்கு தெற்குக்கு என செல்லும் ஜனாதிபதி மத்திய மலைநாட்டில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பாராமுகமாக இருப்பது ஏன். அவரை ஜனாதிபதி ஆசனத்தில் அமரச் செய்ததில் மலையக மக்கள் அதிகளவு பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதை நினைவுபடுத்தி ஜனாதிபதி ஆணைக்குழு அல்லாதபோதும் குறைந்த பட்சம் ஒரு குழுவை அமைத்தேனும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

The president needs to intervene on the Salary of workers; thilagaraj mp Request in the parliament

Comment here