மலைநாடு

சம்பள விவகாரம் ; தொடர்பில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடியே தீர்மானம் எடுக்க வேண்டும் : ஈரோஸ் கோரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைவதற்கான கால எல்லை நெருங்கிவரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய விடயம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

1000 ரூபா கோரிக்கையை முன்வைத்து முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கத்திற்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுகள் கடந்தமுறை நடத்தப்பட்டிருந்த போதிலும் பேச்சுகள் அனைத்தும் தோல்வியுற்றதால் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. எவ்வித பேதமுமின்றி சகல தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

தொழிலாளர்கள் சுயமாக பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எப்போதும் இல்லாதவகையில் ஏனைய தொழிற்துறையை சேர்ந்தவர்கள் சிங்கள மக்கள், வடகிழக்கு தமிழர்கள், இளைஞர்கள் என சகல தரப்பினரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர்.

தொழிலாளர்களும் தங்களுக்கு நியாயமான சம்பளவு உயர்வொன்று கிடைக்கும் வரை போராடினர். வலுவான போராட்டமொன்று நடந்துக்கொண்டிருந்த நிலையில் வெறும் 50 ரூபா அடிப்படை சம்பள உயர்வோடு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 1000 ரூபா சம்பள கோரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டதோடு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைப் பணமும் தாரைவார்க்கப்பட்டது.

கூட்டு ஒப்பந்தத்தில் பல முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆனால், இந்த ஒப்பந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் பல்வேறு சலுகைகளும் உரிமைகளும் இல்லாமாக்கப்பட்டதோடு ஒரு முறையேனும் திருப்திகரமான சம்பளவுயர்வொன்றை பெற்றுக்கொண்டதாக வரலாறு இல்லையென்று தொழிலாளர்கள் விசனமடைந்துள்ளனர்.

சம்பளவுயர்வு கோரிக்கையை முன்வைக்கும் போதும் அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்போதோ தொழிலாளர்களிடம் கலந்துரையாடாமால் முவுகள் எடுக்கப்படுகின்றன. தொழிலாளர்களின் விருப்பு வெறுப்புகளை கருத்திற்கொள்ளாது தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளமுமே சம்பளத்தை தீர்மானிக்கின்றன. இது வருந்தத்தக்க விடயமாகும்.

நடந்து முடிந்த மேதினக் கூட்டத்தில் மலையகத்தின் இரண்டு பிரதான தொழிற்சங்க அரசியல் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் பிரதான தரப்பான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ{ம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் பெற்றுத்தரப்படும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, இந்த முறை சம்பள கோரிக்கையை முன்வைக்க முன்னர் தொழிலாளர்களோடும் கலந்துரையாடி உழைப்புக்கேற்ற ஊதிய கோரிக்கையொன்றை முன்வைக்கவேண்டும் என்றார்.

Comment here