விளையாட்டு

அதிரடி வெற்றியைப் பெற்ற மும்பை: 13 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தியது

நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளின் 37 ஆவது போட்டியில் மும்பை அணி 4 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. அந்தவகையில் 13 ஓட்டங்களால் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

மும்பை, வங்கடே விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இந்தப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை அணி சார்பில் யாதவ் அதிரடியாக 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் லெவிஸ் 43 ஓட்டங்களையும், பாண்டியா ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நரைன் மற்றும் ருஷெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 182 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறியது. எனினும் பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய போதும் கொல்கத்தா அணியால் வெற்றியிலக்கை அடைய முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதனால் 13 ஓட்டங்களால் வெற்றியைப் பறிகொடுத்தது.

கொல்கத்தா அணி சார்பில் உத்தப்பா 54 ஓட்டங்களையும், கார்த்திக் 36 ஓட்டங்களையும், நிடிஸ் ரணா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாண்டியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மக்லகென், பம்ரா, க்ருனல் பாண்டியா மற்றும் மார்கண்டே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகளின் பட்டியலில் 5 ஆவது இடத்திலுள்ளது.

Comment here